”ஃபுக்குஷிமா – ஒரு பேரழிவின் கதை” புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு, புத்தக ஆசிரியர் – மிக்கேயல் ஃபெரியேவின் வாழ்த்து
மார்ச் 10, 2017, அலையன்ஸ் பிரான்சிஸ், பாண்டிச்சேரி
அன்பு நண்பர்களே,
”ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை” எனும் என் நூல், உங்கள் இனிய மொழியில் வெளியிடப்படுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதோடு இதன் மூலம் எனக்குப் பெரும் சிறப்பு செய்திருப்பதாகவும் உணர்கிறேன். இந்த மொழிபெயர்ப்பு சாத்தியமாக காரணமாக இருந்த பலருக்கு நான் நன்றி கூறியாகவேண்டும். முதலாவதாக, தடாகம் பதிப்பகம் பிறகு கலிமார் பதிப்பகம் ஆகியோர். இவர்களிடையே பாலமாக இருந்த ஆன்சொலான்ழ் நோபல். இந்த முயற்சியில் புதுச்சேரி பிரஞ்சு நிறுவனத்தின் ஆய்வாளர் எம்.கண்ணன் அவர்களது உதவியையும் பிரஞ்சு தூதரகத்தின் ஒத்துழைப்பையும் மறக்க இயலாது. குறிப்பாக, நிக்கோலாஸ் இதியேவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இம்முயற்சியின் வெற்றிக்கு காரணமக இருந்த பொறுமையும் திறமையுமுடைய இருவருக்கு என் நன்றி. முதலில், என்னுடைய நூலின் மொழிபெயர்ப்பாளர் வெங்கட சுப்புராய நாயகர். ஃபுக்குஷிமா, மொழிபெயர்ப்பதற்கு எளிதான நூல் இல்லை என்பதை கூறியாக வேண்டும். பிரதி மிகவும் அடர்த்தியானது. நிகழ்வுகள் வேகமான கதியில் தொடர்ந்தபடி இருக்கும். ஒட்டுமொத்தமான அமைப்பையும் ஒவ்வொரு அத்தியாயத்துக்குமான தனித்துவமான தொனியையும் புரிந்து கொண்டாக வேண்டும். மேலும், மொழியின் பல்வேறு படிமங்களைக் கையாள்வதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில நேரங்களில் அறிவியல், சில நேரங்களில் கவித்துவம், சில நேரங்களில் தத்துவம், சில நேரங்களில் சோகம் எனப் பல்வேறு தொனிகளை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. இவை அனைத்தும் பிரதிக்குள் இடைவிடாது பின்னிப் பிணைந்த படி இருக்கும். இவை தவிர, அதிக சொற்சிலம்பங்களும் பல்வேறு விதமான பண்பாட்டு குறிப்புகளும் இந்நூலில் உள்ளன.
இம்மொழிபெயர்ப்புப்பணியை மேற்கொள்ள, நிச்சயமாக வெங்கட சுப்புராய நாயகர் பொருத்தமானவர் என்பதில் அய்யமில்லை. பெறும் கவிஞரும் அற்புதமான நாவலாசிரியருமான பிலேஸ் சாந்திரார் அவர்களின் படைப்புகளில் சிறப்பு தேர்ச்சி பெற்றவரான இவர், பிரஞ்சு மொழியின் பன்முகத்தன்மையை உணர்ந்தவர். அதை எவ்வாறு தமிழில் படைக்கவேண்டும் என்பதையும் அறிந்தவர்.
என் முன்னோடிகளில் ஒருவரும் என் நூல்களை பிரான்ஸில் முதன்முதலாக ஆதரித்தவர்களில் ஒருவருமான புகழ்பெற்ற எழுத்தாளர் லெ கிளெஸியோவையும் மொழிபெயர்த்தவர் நாயகர்.
நோபல் பரிசு பெற்ற அந்த எழுத்தாளரிடமிருந்து, ஒரு நாள் காலை டோக்கியோவில் நான் இருந்தபோது எனக்கு கிடைத்த கடிதம் இன்னமும் என் நினைவில் உள்ளது. ஜப்பானின் வடகிழக்கில் உள்ள ஃபுக்குஷிமா பகுதியில் பயணம் மேற்கொண்டிருந்த போது அக்கடிதத்தை என்னோடு எடுத்து சென்றிருந்தேன். சூறையாடப்பட்ட அந்த பூமியில் எனக்கு ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள சொற்கள் – சொற்கள் மட்டுமே எனக்கு உதவ இயலும் என நான் நினைத்திருக்க வேண்டும். லெ கிளெஸியோவை மொழியாக்கம் செய்த இந்தியர் என்னுடைய நூலை மொழிபெயர்த்துள்ளார் என்பதை அறியும்போது எனக்கு உற்சாகம் ஏற்படுகிறது. லெ கிளெஸியோ வரிசையில் என்னை வைத்து, எனக்குப் பெருமை சேர்த்தமைக்காக வெங்கட சுப்புராய நாயகருக்கு நன்றி கூறுகிறேன்.
இறுதியாக, இம்மொழிபெயர்ப்பின் மற்றுமொரு பெரும் காரண கர்த்தாவுக்கு என் நன்றியைக் கூறியாக வேண்டும். மிகைப்படுத்தாமல் சுருக்கமாக ஆனால் மிகுந்த பாசத்தோடு அதைத் தெரிவிக்க விழைகின்றேன். அவர் இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. ஒலிவியே லித்வினைப்பற்றி தான் நான் பேசப்போகிறேன்.
அவர் தான் என்னைப் புதுச்சேரிக்கு அழைத்துச் சிறப்பித்தவர். அந்த ஊரின் அழகிய பகுதிகளைக் காட்டி எனக்கு வழிகாட்டியவர். பிரஞ்சு ஆய்வு நிறுவனங்கள், அரவிந்த ஆசிரமம், ஆரோவில், லிசே பிரான்ஸே எனப் பல்வேறு இடங்களில் பலரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர். இணைப்புப் பாலமாக விளங்கும் இவரைப் போன்றவர்களின் உதவியால் தான் மனிதர்கள், எண்ணங்கள், படைப்புகள் ஆகியவற்றின் சங்கமமும் பரிமாற்றமும் நிகழ இயலும். இது உண்மையிலேயே மிகவும் கடினமான, ஆனால் மதிப்புமிக்க பணியாகும். இக்காலத்தில் காணப்படும் ஆக்கிரமிப்பு, வரையறையோடு பழகும் போக்கு ஆகியவற்றின் இடையே இப்பணியை ஒலிவியே லித்வின் செவ்வனே ஆற்றிவருகிறார். அவருக்கு அனைவரின் முன்னிலையில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை நான் குறிப்பிட்டவர்களின் உதவியோடு நிகழ்ந்துள்ள இந்த மொழியாக்கம் ஏன் என்பது குறித்தும் ஃபுக்குஷிமாவின் கருப்பொருள் குறித்தும் கூற வேண்டியது அவசியம் எனக்கருதுகிறேன்.
ஃபுக்குஷிமா, ஒரு பேரழிவின் கதை, 2011 மார்ச் 11ந்தேதி நிகழ்ந்த மூன்று பேரிடர்களைப் பற்றி விவரிக்கிறது. ரிக்டர் அளவில் 9ஐ தொட்ட நிலநடுக்கம் அது (அளவிடும் நவீனக் கருவிகள் புழக்கத்துக்கு வந்தபின் நிகழ்ந்த 4 ஆவது சக்தி வாய்ந்த நிலநடுக்கம்). கடலோரப் பகுதியில் 600கி.மீ வரைப் பாதித்து,1900 பேரை பலிகொண்ட சுனாமி, ஏழாம் நிலை அணு உலை விபத்து. இப்பேரிடர்களில், அணு உலை விபத்து மிகவும் புதிரானது மட்டும் அல்ல. நீண்ட நாட்கள் நீடித்து பதட்டமடைய வைப்பதாகவும் அமைந்தது. விபத்து நிகழ்ந்த நாளில் இருந்து 30000 பேர் வெ ளியேற்றப்பட்டனர். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இத்தகைய மக்கள் வெளியேற்றத்தை ஜப்பான் கண்டதில்லை. இவர்களில் பாதிப் பேர் இன்னமும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்கள் அணு உலை அகதிகள்.
ஜப்பானின் 8 சதவீதம் பேர் காற்று, நிலம், நீர் எனப் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். செர்னோபில் நிகழ்வுக்குப் பிறகு மிகவும் பரவலாகவும் நீடித்தும் உள்ள கதிரியக்கப் பாதிப்பு இப்போதுதான் ஏற்பட்டுள்ளது. இன்னும் நூறு அல்லது இலட்சக்கணக்கான ஆண்டுகள் வரை வசிப்பதற்கு இயலாதவையாக சில பகுதிகளை இந்த பாதிப்பு மாற்றியுள்ளது.
இச்சம்பவம் சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பாதித்து இதற்குமுன் கண்டிராத பொருளாதாரப் பேரழிவைக் கொண்டு வந்தது (குறிப்பாக, விவசாயம், சுற்றுலா ஆகிய துறைகள்) மிகப்பெரிய கையறுநிலையில் உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றின் மக்களைத் தள்ளிய உளவியல்பூர்வமான அதிர்ச்சியாகவும் இது அமைந்தது. உண்மையான இழப்புகள், ஏற்படக்கூடிய விளைவுகள் ஆகியவை தொடர்பாகப் பரவலாகக் காணப்படும் நிச்சயமற்ற தகவல்கள், இவற்றோடு சில உணவுப்பொருட்களின் தயாரிப்பில் ஏற்படக்கூடிய நீடித்த கிருமித் தொற்று, மரபுவழியிலும் பிறவியிலேயே ஏற்படக்கூடிய உடல் ஊனப் பாதிப்பு அபாயங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
முன் வைக்கப்படும் தீர்வுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக அல்லது தோராயமாக உள்ளன. புகுஷிமாவின் நிகழ்வு தரும் செய்தி சிந்தனைக்குரியது. தனிப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல பொதுவான தர்க்கத்திற்கே இச்செய்தி பொருந்தும். வாழும்முறை மற்றும் சிந்தனைப்போக்கை கேள்விக்குள்ளாக்கக் கூடியது.
இந்தியாவும் அணு உலை நாடாகக் காணப்படுகிறது. 2014ஆம் ஆண்டு முதல் 3.5% மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. ஆனால் எனக்குக் கிடைத்துள்ள தகவல்கள் உண்மையாக இருந்தால் 6 புது அணு உலைகள் அமைக்கப்படுவதாக அறிகிறேன். இந்த அணு உலைகள், டில்லியில் இருந்து 150 கி.மி. தூரத்தில், அதாவது நில நடுக்கம் ஏற்பட பெரிதும் வாய்ப்புள்ள பகுதியில் புலாந்தூர் மாகாணம், நிரோவில் உள்ளது. சென்னைக்கு தெற்கே 80 கி.மீ. தொலைவில் கல்பாக்கத்தில் சென்னை அணு உலை உள்ளது. 150 கி.மீ, 80 கி.மீ. விபத்து நேர்ந்தால் இவையெல்லாம் ஒரு தூரமே இல்லை. லேசான சிறு காற்று போதும். சில மணி நேரங்களில் ஒட்டு மொத்த பகுதிகளுக்கும் அழிவு ஏற்பட்டு லட்சகணக்காண மக்களுக்கு கதிரியக்கப் பாதிப்பு ஏற்படும். இது விஞ்ஞான புனைவு இல்லை. ஃபுக்குஷிமாவின் உதாரணம் நமக்கு இதை நினைவூட்டுகிறது. இந்தியா ஒரு பெரிய, மிகப் பெரிய நாடு, பரப்பளவில் மட்டும் அல்ல, பண்பாட்டு அறிவுப் புலத்திலும், விசாலமானது. பல்வேறு துறைகளில் ஆண்கள், பெண்கள் என பல பெரும் தலைவர்களை உருவாக்கி தந்த நாடு. இத்தகைய நாட்டுக்கு நிச்சயமாக சக்தி தேவைதான். ஆனால் அது அணு சக்தியிலிருந்து தான் தருவிக்க வேண்டுமா? அங்கு வசிக்கும் மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். உங்கள் மொழியில் பலருக்கும் கிடைக்கவுள்ள இந்த நூலில், நான் விவரித்து இருக்கும் ஃபுகுஷிமாவின் சோகம், இக்கேள்வி குறித்து சிந்திக்க உதவட்டும். நன்றி.
Reviews
There are no reviews yet.