இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு
இந்துமதப் படிநிலைச் சாதியச் சமூகத்தில் சமூக விடுதலைக்கான சாதி இயக்கங்களின் சிந்தனையும் செயல்பாடும் பன்மைத் தன்மை கொண்டவை. மனிதகுல வரலாற்றில் இயற்கை வழிபாட்டில் தொடங்கி மத நிறுவனமாக மாற்றப்பட்ட பரிணாமத்தில் அதனோடு இணைந்த, விலகிய இயக்கமும் அடங்கும். தீண்டாமை இழிவுக்குக் காரணமான படிநிலைச் சாதியக் கட்டுமானத்தை நிறுவி புனிதம் தீட்டு என்ற எதிர்மறைக் கருத்துகளின் வழி சாதியை நியாயப்படுத்தும் அசகோதரத்துவ இந்துமதத்தைப் புறக்கணிப்பதும் சகோதரத்துவத்தை கற்பிக்கும் மதங்களைக் கைக்கொள்வதும் ஒடுக்கப்பட்ட சாதி இயக்கங்களின் ஓர் அங்கம். அதேசமயம் மாற்று மதத்தைத் தழுவுவது மட்டும் இயக்கம் அல்ல. இந்து மதம் எனக் கூறப்படும் சைவ, வைணவத்துக்கு முரணான வழிபாட்டு முறையைக் கொண்டிருக்கும் தலித்துகள் தீண்டாமையிலிருந்து விடுபட பவுத்தம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மதங்களை மட்டுமின்றி பகுத்தறிவையும் நாத்திகத்தையும் கைக்கொண்டனர். இப்பன்மைச் செயல்பாடு குறுக்கப்பட்டு பவுத்தத்தை மையமிட்டு ஒற்றைத் தன்மையுடன் தலித் இயக்கமும் வரலாறும் கட்டமைக்கப்படுகிறது. தலித் இயக்கத் தலைவர் அனைவரையும் மதச் சிமிழுக்குள் அடைக்கும் போக்கில் இரட்டைமலை சீனிவாசனும் சிக்கியிருக்கிறார்; அவர் சமயச் சார்பற்ற நிலைப்பாட்டைக் கொண்டவர் என்பதை இந்நூல் நிறுவுகிறது.